RSS

04/12/2019

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

அன்பான நண்பி, Quilling teacher அஞ்சு என அழைக்கப்படும் ஏஞ்சலின் க்கு
                             இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியத்துடன் என்றென்றும் புன்னகையுடன், அன்னை தெரசாவாக மகிழ்வுடன் மனதுக்கு பிடித்த சேவையை நன்றாக செய்து சகலசெளபாக்கியங்களும் பெற்று, குடும்பத்தினருடன் மகிழ்வாக வாழ வாழ்த்துகின்றேன்.

இது  நான் அச்சில் செய்து எடுத்த பூக்கள்,இலை கொண்டு செய்வோம் என செய்தால் அச்சில் சரியான முறையில் வெட்டுபட்டு வரவில்லை.  அளவில் சின்னதா வருகிறது. பின் அந்த அச்சில் வந்த 1 இலை, 1 பூவின் அச்சினை எடுத்து  கொஞ்சம் பெரிதாக பேப்பரில் வரைந்து,  வெட்டி வைத்து பின் இக்கலர்பேப்பேரில் வெட்டி எடுத்து செய்திருக்கேன். அவசரமான கைவேலைதான். குட்டிகுட்டி பிழை இருக்கு. 2சைட் ஷேடட் கார்ட் ல் ஒட்டியிருக்கேன். அஞ்சு சொல்லிதந்ததை இன்னும் கொஞ்சம் விடாமல் இப்படி தெரிந்தவர்களுக்கு செய்கிறேன். தொடர்ந்து செய்தால் நல்லது. இடையில் தானும் நண்பர்களுக்கு செய்வதில் மகிழ்ச்சியே. மிக்க நன்றி அஞ்சு.💕அஞ்சுவுக்கு பிடிக்குமென நினைக்கிறேன்.
Candied almonds (Gebrannte Mandeln)
ஒவ்வொரு க்றிஸ்மஸ் வரும்போதும் இங்கு நவம்பரில் க்றிஸ்மஸ் மார்க்கெட் போடுவாங்க. நான் முன்பும் ஒரு பதிவு போட்டிருக்கேன். அங்கு இந்த பாதாமை சீனிபாகில் வறுத்து நல்ல க்ரிஸ்பா விற்பாங்க. கொஞ்சம் விலையாக இருக்கும்.அதனால் இப்போ நானே செய்கிறேன். செய்முறை இன்னொரு பதிவில் போடுகிறேன். இது அஞ்சுவுக்காக.....கார்த்திகைபிறைக்கு அல்ல,அல்ல,அல்ல

*****************************************************

இப்போ இங்கு குளிர்கால ஆரம்பத்தில் இருக்கிறோம். டிசம்பர் ல குளிர்காலம் ஆரம்பம். மார்ச் வரை தொடரும். இன்னும் பனிமழை வரவில்லை. ஆனால் மழை,காற்றுடன் குளிர்ர்ர்ர்ர்ர். இங்கு இக்காலப்பகுதியில்தான் நடப்பது, ஓடுவது என உடம்பை கவனிப்பார்கள். ஓரளவு குளிருடன் இருக்கும் காலநிலையில் இவை இங்கு சாத்தியம். பின் மைனஸ் ல் வந்தால் வீட்டுக்குள் தான் முடங்கவேண்டும். சிலவேளை நல்ல பனிபொழிவு இருந்து வெயில் எறித்தால் அனேகமானோர் நடப்பார்கள். வாரயிறுதியில் நடந்தபோது எடுத்தவை.......


******************************************************

ஆ....இது கார்த்திகைபிறைக்காக..... நான் சொன்னேன் இல்லையா இடிதாங்கி. குரக்கன் சமபோசா என. அதுதான் இது. நல்ல ருசீஈஈஈஈஈ. கிடைத்தால் வாங்கி ருசிக்கவும்.
*******************************************************
ஊருலா செல்கின்றேன். எல்லோரையும் அடுத்த வருடம் சந்திக்கின்றேன். அன்பும்,நன்றியும்
நேரம் கிடைக்கும்போது பதில்கள் தருகிறேன்.

25/11/2019

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்!!

இந்த பதிவை வாசிக்க முன் கண்டிப்பா இந்த videoவை பார்த்தபின் தான் வாசிக்க செல்லவேண்டும்.ஊரில வீட்டு வளவுக்குள் 2,3 மரம் வைச்சிருக்கிற நிலையில...........
இங்கு கறிவேப்பிலை காண கண்கோடி வேண்டும். அரிதான ஒன்றாகிவிட்டது. இடைக்கிடை கிடைக்கும். ஆனா முடிந்துவிடும்.  நாங்க ஏசியன் கடைக்கு போகவே 1 மணித்தியாலம் வேணும். அதைவிட அதன் விலைக்கு 3 பால் பாக்கெட், 2 மா பாக்கெட் வாங்கிடலாம். அப்படியான ஒன்றாகிவிட்டது.  இங்கு இறக்குமதி செய்தவர்கள்தான். ஆனால் அதில் பூச்சிகள் இருந்ததை பார்த்து அதை தடை செய்துவிட்டார்கள்.  திருட்டுதனமா தரைவழிபாதையாக வருகிறது என்கிறார்கள்.  இருக்கிறது, ஆனா விலை.  நாங்கதான் ஒன்றுக்கு அடிமையானால் விடமாட்டோமே.. அப்படியானதுதான் இந்த கறிவேப்பிலை விடயம்.  அதை குழம்பில் காணவில்லை எனில் (அதை சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது வேறு விடயம்) கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. இங்கு 15கி  1 யூரோ 85 சென்ட்.  

இப்படி நிலமை இருக்க ஆபத்பாந்தவனாக எங்களுக்கு தெரிந்த அக்கா ஒருவர் சின்னதா கறிவேப்பிலை செடி தந்தா. ஆ....சந்தோஷமோ சொல்லமுடியாது வார்த்தைகளால்.  அதன் பின்புதான் எனக்கு செடி பராமரிப்பு தேடல் ஆரம்பம் ஆனது.
அதற்கிடையில் ஊருக்கும் போகவேண்டி வந்தது. அப்போ இந்தமாதிரி ஒரு முன்னேற்பாடு செய்துவிட்டு  சென்றேன். (எனது நண்பி வந்து தண்ணீர் ஊற்றுவதாக சொன்னா. அவாவிடம் தண்ணீர் பார்த்து விடச்சொன்னேன்.)  அப்போ இவா வீட்டிற்கு வந்த புதிதில்.. (ஹா..ஹா.. செடியை மரியாதையாக சொல்வதுதான் என் வழமை. அப்படியே வீட்டினருக்கும் பழக்கிவிட்டேன். )


இதுதான் அந்த கறிவேப்பிலை செடி. இது  கொஞ்சம் வளர்ந்தபின் எடுத்தது.

வீட்டில 3K நிற்கிறார்கள். (கற்பூரவள்ளி,கற்றாழை,கறிவேப்பிலை. பிறகு பிறை வந்து கேள்வி கேட்பா. முன் எச்சரிக்கையா எழுதியாச்சு)


ஊருக்கு போயிட்டு வந்தபின் ஒரு 4,5 மாதத்தின் பின்  என் கறிவேப்பிலை செடி நோய்வாய்ப்பட்டு இந்த நிலமைக்கு வந்துவிட்டது. உண்மையில் எனக்கு சரியான கவலை. என்னவெல்லாமோ செய்து, யாரையோ கேட்டு, வீடியோ பார்த்து செய்தால் அவா பட்டுபோய்விட்டா. ஏன் எனத்தெரியவில்லை. சொல்லமுடியாகவலையெனக்கு.😢😢😢


ஊருக்கு போயிட்டு வரும்போது சில செடிகள், விதைகள் கொண்டு வந்தேன். அதில் நான் சின்னபிழை விட்டுவிட்டேன். என்ன விதை என எழுதாமல் விட்டது. சரி போட்டுபார்ப்போம், வந்தபின் தெரியும்தானே என விட்டுவிட்டேன்.
அதில் எங்க வீட்டு கறிவேப்பிலை மரத்திலிருந்து ( பெரியமரமா நிற்கிறா. இம்மரம் நான் சின்னபிள்ளையாக இருந்தபோது இருந்த மரத்தின் மகள்மரம்.) சில விதைகளை எடுத்துக்கொண்டு வந்தேன். இங்கு சிறு தொட்டியில்  சிலதை போட்டு வைத்தேன். என்ன விதை எனத்தெரியாமலே கறிவேப்பிலை விதையை  கனகாம்பர செடியின் தொட்டியில் விதைத்தேன்.  பின் மறந்தும் போனேன். கனகாம்பரம் சிலநாளில் பட்டுவிட்டது. பின் தொட்டியை எடுக்கச்சொல்லி கணவர் சொல்ல, நான் பார்த்தபோது  ஏதோ சின்னதா துளிர் இருக்க,  அதுவே என் மனதிலும்... மனம் படபடத்தது. என்னவா இருக்கும் என ஆர்வத்தோடு சில நாட்கள் பொறுமையை கடைபிடித்தேன்.  கொஞ்சம் வளர்ந்திருந்து 2 இலைகள் வர ஆர்வக்கோளாறால் தொட்டு பார்க்க. நல்ல வாசம்.  ஆவ்..... ..கறிவேப்பிலை.
வா..வ் எனக்கு பயங்கர சந்தோஷம். எங்க வீட்டுச்செடி இப்போ இங்கு என் வீட்டில்..

இது கடந்த வருடம் ஊருக்குபோனபோது (முதல் செய்தமாதிரி) பிளாஸ்டிக் கானில் (Plastic can) தண்ணீர் விட்டு அதற்குள் கயிறு (நான் நூல் கயிறு அதாவது ஸ்கிப்பிங் skipping rope பயன்படும் கயிறு) விட்டு, மற்றைய நுனியை செடியினுள் வைத்தால் தண்ணீர் அளவாக சொட்டும். கானில் தண்ணீர் மட்டும் பார்த்து நிரப்பினால் போதும்.  இந்த ஏற்பாட்டை செய்தேன். பின் மகனார் பார்த்து தண்ணீர் விட்டு விட்டார்.  வீட்டினுள் இருந்த எல்லா செடிகளுக்கும் இந்த முறையை பாவித்தேன்.

இந்த  வருடம் இன்னும் சில விடயங்களை செய்து, இப்போ நன்றாக வளர்ந்து அவாவும் 2 குட்டிசெடிகளை  தந்துவிட்டா. இப்போ வீட்டில் கணவர் பிடுங்க விடுவதேயில்லை.  அது இன்னும் கொஞ்சம் வளரட்டும் என்பதால்.. .அதை சும்மா தொட்டாலே நல்ல வாசம். அதைவிட எங்க வீட்டு செடி என்ற செண்டிமெண்ட் வேறு. ஆனா நான் பச்சடி, சாலட் க்கு போட அதில் ஆய்ந்து போடுவேன். நன்றாக இருக்கும். கறிவேப்பிலை வளர நீண்டநாட்கள் எடுக்கும். ஊரில் மரத்தின் கீழ் நிறைய செடிகள் இருக்கு. காகம் அதன் பழங்களை கொத்தி கீழே போட அவை வளருகிறது.
 
                      
                 இப்ப உடனே எடுத்த போட்டோ. வெயில் இல்லாததால் இப்படி.3 கிளைகளுடன்..

நல்ல பராமரிப்பு இருந்தால் இந்நாட்டிலும் வளர்க்கலாம். இங்கு எங்க நாட்டு செடிகள் வளர்ப்பதென்பது சவாலான விடயம். எங்க ஊர் வெப்பநிலை இங்கில்லை. அதை விட 5, 6 மணித்தியாலங்கள் வெயில் கண்டிப்பா தேவை. இப்ப பாருங்கோ இங்கு 4 மணி எனில் இருள் சூழ ஆரம்பித்துவிடும். 4 மாதம் கொஞ்சம் சிரமம். முயர்சி செய்து வளர்த்து வருகிறேன். மேலும் சில செடிகள் இருக்கு.அவை பின்னர் வரும். பிறகு கார்த்திகைபிறை பொயின்ட் ஆயிடுவா.
அதற்காக நீங்க கோடீஸ்வரியோ? எனக்கேட்ககூடாது. இங்கு இவா வீட்டில் நின்றாலே இப்போதைக்கு கோடீஸ்வரிதான்.
*******************************************************

27/10/2019

தீபாவளி வாழ்த்துக்கள்

           
            இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

27/03/2019

மாலை பொழுதில்....

கடந்த வாரயிறுதியில் எங்கள் நகரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றோரமாக நடந்தபொழுது எடுத்த படங்கள்.  இளவேனிற்காலம் (வசந்தகாலம்) ஆரம்பித்த பின் வந்த வெயில் என்பதால் மக்கள் அதிகமா வந்திருந்தார்கள். இந்த ஆறு எங்க மாநிலத்தில் பிரபல்யமானது. இந்நாட்டில் மிக பிரபல்யமான பீர்களில் ஒன்று (Beer) எங்க நகரத்துக்கு அருகில் தயாரிக்கப்படுகிறது. அந்த பீர்க்கு இந்த ஆற்றையே விளம்பரத்துக்காக காட்டுவார்கள். பார்முலா 1(Formula 1)  பார்த்தால் தெரியும். ஆறின் பெயர் Biggesee.(பிbகேஸே) இந்த ஆற்றை சுற்றி வர 5 கி.மீ ஆகும்.  Swimming pool, Restaurant,  சிறுவர்களுக்கான Golfclub என சுற்றி வர இருக்கின்றன. இன்னும் வேறு கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

 இவர்கள் அந்த இடத்து செல்லபிள்ளைகள் & ரவுடிகள். நீங்க அவர்களை கவனித்துவிட்டுதான் செல்லவேண்டும். கவனித்து என்றால் ,அவர்களிடம் பேசியோ,தடவிகொடுத்தோ, அல்லது சாப்பிட ஏதாவது கொடுத்தோ தான் செல்லவேண்டும். உணவு எனில்  கட்டுப்பாடு இருக்கு.  அதையும் மீறி கொடுத்து பழக்கிவிட்டார்கள். அதனால் இவர்கள் ராஜ்ஜியம்தான் அந்த எரியாவில். கவனிக்காமல் போனால் தலையை நீட்டிக்கொண்டு துரத்தி வந்து கொத்துவார்கள். இந்த படம் கூட அவர்களுடன் பேசிக்கொண்டுதான் எடுத்தேன். நடக்க ஆரம்பிக்கும் இடத்தில் இருப்பார்கள். தூங்கிக்கொண்டு இருந்தால் பிரச்சனையில்லை. பேசாமல் நகர்ந்துவிடலாம்.

               இப்படிதான் தலையை நீட்டிக்கொண்டு துரத்துவார்கள்.
இவர்களும் கரையில் இருப்பார்கள். மற்றைய சின்ன வாத்துகளும் இருப்பார்கள். அன்று எல்லாரும் பிசி. ரவுடிகள் மட்டுமே கரையில் உலாத்திக்கொண்டு இருந்தார்கள்.
                                     
                                      படகு சவாரி

இந்த இருக்கையில் இரு வயதானவர்கள் வெயிலில் இயற்கையை ரசிக்கிறார்கள்.
இது இடையில் இரும்புபாலம் ஒன்று ஆற்றின் குறுக்கே போட்டிருக்கிறார்கள். இடது பக்கம் ரயில் தண்டவாளமும் இருக்கு.

ரயில் தண்டவாளம் 

 அந்நேரம் ரயிலும் வந்தது. இதுதான் எங்க நகரத்து குட்டி ரயில். 2 பெட்டிகளே இருக்கு.
 இது ஒரு உயரமான ஏற்றமிகு பாதை. இப்போ அடுத்த பக்கம் வந்தாயிற்று.
         நடந்து வந்த பக்கத்தில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்கள்.


இது ஒரு restaurant. அன்று இருக்க இடமில்லாமல் திரும்பி சென்றவர்கள் பலர்.


                   Swimmingpool. இது வெளிப்பகுதியில் இருப்பது 
           
                              Swimmingpool Entrance


                  நடை ஆரம்பித்த இடம்.  களைப்பில் உறக்கம்....


இது சிறிய காணொளி....
இதில் மேலே உயரமாக தெரிவது நெடுஞ்சாலை..

அப்படி சுற்றி இப்படி வந்தாச்சு.....


இந்த ஆறு குளிர்காலத்தில் கடும் குளிர் எனில் முற்றிலுமாக உறைந்துவிடும். 
                                 (tks google)


07/03/2019

ஊரோடு உறவாடி.....

 நன்றிகள் 😍 😍
பதிவுக்குள் போவதற்கு முன் அன்பு அதிரா, அன்பான அஞ்சு, அன்பு கோமதிஅக்கா, அன்பான அனு ஆகியோருக்கு என் அன்பான நன்றிகள். அதிரா ப்ளாக்கில் எழுதுங்கோ என சொல்லி களைச்சு போனா. கூடவே அஞ்சுவும். இம்முறை அதிராவின் பிறந்தநாள் பதிவில் கோமதி அக்காவும் அனுவும் இவர்களுடன் சேர்ந்து கூட்டணி அமைத்துவிட்டார்கள்.  இவர்களுக்கு நன்றிகளை 🙏🙏🙏சொல்லிக்கொண்டு எனது உரையை..சே..என் பதிவினை பதிகிறேன்.

ஆரம்பமாக இனிப்பான  Dates Cake (பேரீச்சம்பழ முட்டையில்லா கேக்) எடுத்துக்கொள்ளுங்கோ.
இது  தீர்க்கதரிசி அதிராவின் குறிப்பு என்பதனை பதிவு செய்கிறேன். வார இறுதியில் மகனார் என்னிடம் ஸ்நாக்ஸ் ஏதாவது செய்யுங்கோ என்றார். எனக்கு கேக் பொதுவா சரியாக வருவதில்லை. இன்னைக்கு இதையே செய்வோம் என எண்ணிய எனக்கு அதிரா செய்தது நினைவு வர செய்துபார்த்தேன். முதல் தடவையிலேயே நல்ல மென்மையாக, ருசியாக வந்தது. கேக் சாப்பிடாத கணவர் கூட சாப்பிட்டார்.

-----------------------------------------------------------------------------
சரி இப்போ  பதிவுக்கு வருகிறேன். நாங்க வருடம் ஏதாவது ஒரு நாட்டுக்கு  போவது அல்லது ஊருக்கு போவது என எங்க விடுமுறை அமையும். நான் எப்படியாவது எங்க ஊருக்கு வருடம் ஒரு முறை போய்விடுவேன்.  அதிரா  அந்தாட்டிக்கா போவதுபோல....
அதே போல் இம்முறை இரட்டிப்பு பயணம். அதாவது ஒரு நாட்டுக்கும் , ஊருக்கும் போனோம். வியட் நாம் , மலேசியா, இலங்கை என பயணமானோம்.   மலேசியா ஏற்கனவே போயிருப்பதால் அங்கு பெரிதாக வெளியிடங்களுக்கு செல்லவில்லை. கணவரின் சகோதரர் இருப்பதால் அங்கு சென்றது மட்டுமே. வியட்நாம் புது நாடு சொல்லவிடயங்கள் இருப்பதால் பின் அதனை எழுதுகிறேன்.( ஒரு பதிவும் எழுதலாமெல்லோ)

இது மலேசியாவில் ஒரு மாலை பொழுதில் சூரியன் மறையும் காட்சி....... இம்முறை ஊரில் அதிக நாட்கள் நின்றாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் சென்று திரும்பிவர மனமில்லாமல்தான் வருவது வழக்கம். வரவர இவ்வெண்ணம் அதிகமாகிக் கொண்டே போகிறது.
நீண்ட வருடங்கள் கழித்து இம்முறை பொங்கலை அங்கு கொண்டாடினேன். ஊரிலிருந்தபோது  சாணியால் முற்றம் மெழுகியது. நீண்டகாலமாகிவிட்டதால் நான் மெழுக ஆரம்பித்து  கொஞ்சம்  கஷ்டப்பட்டுப்போனேன்.  இம்முறை நிறைய அட்டைகள் வேறு. எல்லாவற்றையும் சமாளித்து, மெழுகி,  பொங்கலை கொண்டாடியாகிவிட்டது .

                                  அக்கா வீட்டின் வாயில்.

இதுதான் பொங்கல் வைத்த இடம்.  வேலிக்கு அப்பால் வயல்வெளி. இதுதான் கிழக்கு பக்கம். முன்னுக்கு முற்றம் இல்லை. பின்பக்கமே இடம் இருக்கு.

                               இது நான்  மெழுகியது .

                           பொங்கல் பானை வைத்தாகிவிட்டது .

                                        அடுப்பு பற்றவைத்தாச்சு

    சூரியனார் வந்துவிட்டார். இந்நேரம் கொஞ்சம் குளிர் இருந்தது.

உண்மையில் சூரியன் வர பாலும் பொங்கியது. சுற்றவர பொங்கியது, மிக சந்தோஷமா இருந்தது.


                            சூடான  வெயிலா வந்துவிட்டது

பொங்கல் முடிந்து சூரிய பகவானுக்கு படைத்தாயிற்று.  த(அட் )டைகளை  தாண்டி பொங்க வேண்டியதாகி போச்சு.  புது துணி (புடைவை) அணிந்து ,பொங்கி பின் கோவில் சென்று சாமி தரிசனம் முடித்து வந்து, சாப்பிட்டு அக்கா வீட்டில் பொங்கல் கொண்டாடியது  இவ்வருடம் மறக்கமுடியாதவொன்று.
......................................................................

வேம்படி போகிறார் 
 
இவர்கள்தான் அந்த தடைகள். இம்முறை அதிகளவில் பல்கிபெருகிவிட்டார்கள். இவர்கள் டபுள்டெக்கர் மாதிரி ஒன்றின் மேல்  ஒன்றாக ஏறி சவாரி செய்வார்கள். நாங்க இவர்களை செட்டி அட்டை என்போம் சில இடங்களில் சரக்கட்டை என்பார்கள். காலிற்கிடையில் மிதிப்படுவதே இவர்களது வேலை. நல்ல ஸ்பீடா ஏதோ "கிணற்றுக்கட்டில் வைத்த குழந்தையை எடுக்க ஓடுமா போல "போவார்கள். வேறு ரகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை code word ஆக  "வேம்படி" எனவும் சொல்வோம்.
அது ஒண்ணுமில்லை இலங்கையில் பாடசாலைகள்  எல்லாம்  யூனிபோர்ம் அணியவேண்டும். uniform)ஆண்கள் பெண்கள் என பாடசாலைக்கு யூனிபார்ம் தான். பெண்கள் white frock ம் , ஆண்கள் வெள்ளை சேர்ட், நீல நிறத்தில் காற்சட்டை அணியவேண்டும். 11ம்,12ம் வகுப்பு படிக்கும் ஆண்கள் நீளகாற்சட்டை ப்ளூ கலரில் அணியவேண்டும்.  பாடசாலைகளை  பிரித்து காட்டுவது tie தான். டை பார்த்து இது எந்த பாடசாலை என இனம் காணலாம்.  இது  யாழில்  இயங்கும் மிகவும் பிரபலமான பெண்கள் பாடசாலையின் "டை  tie". அது கறுப்பு மஞ்சளில் உள்ளது. இவ்வட்டையும் கறுப்பு மஞ்சளிலேயே  இருப்பதால் அந்த பெயர். 
                                  இதுதான் அப்பாடசாலையின்  tie 

இன்னொரு அட்டை  இருக்கு சிவப்பு கறுப்பில். அதுக்கும் ஒரு பாடசாலை பெயர் இருக்கு. ஹா ..ஹா..ஹா  

******************************************************
 
Copyright பிரியசகி