RSS

09/01/2020

அரசர் வருகையும், கோமதிஅக்கா நண்பர்களும்....

அடுத்த நாள் நகரத்தினுள் இருக்கும்  சில முக்கிய இடங்கள் இருக்கின்றன, நீங்கள் விரும்பினால் பார்க்கலாம் என ஹோட்டல்  ரிசப்ஷன் பெண் கூறி, சில லிஸ்ட் தந்தார். இங்கு முக்கியமான விடயம் எதனையும் வற்புறுத்தமாட்டார்கள். எல்லாமே எங்க விருப்பம்தான். இதனை நாங்க உணர்ந்தோம். அதில் அரசமாளிகை (King Palace), Wat phnom Historical site, Combodian genoside  இப்படி இன்னும் வேறு இருந்தது. இவை முக்கியமானவை நீங்கள் பார்க்கலாம் என சொன்னார் அப்பெண்.

இதில் நான் ஒரு விடயம் குறிப்பிடவேண்டும், என்னவெனில் என்னவருக்கு கம்போடியா நாட்டுக்கு போகனும் என முன்னாடியே விருப்பம்.ஆனா சரிவரல்ல. இப்போ முழுக்க அந்நாட்டுக்கான பயணமாக அமைத்தார்,ஏனெனில் அங்கோர்வாட் கோவில், அடுத்து அதன் வரலாறு அறியும் ஆவல். கொஞ்ச நாட்களா ஒரு மார்க்கமா தெரியுறார். தமிழின்தொன்மை, வரலாறு என தேடி தேடி படிக்கிறார். கீழடி எனும் புக் வாங்கியிருக்கிறார். இந்த கம்போடியாவின் வரலாறு அங்கு நடந்த இனபடுகொலை என மிகுந்த ஆர்வதோடு படித்துவைத்திருந்தார். அங்கு போய் இவைகளை பார்க்கனுமென இருந்தார். பார்த்தாச்சு. உண்மையில் பிரமிப்பாகதான் இருக்கு.

அந்த லிஸ்ட்  ல  தேவையானதை மட்டும்தெரிவு செய்து, நேரத்தினையும் கணக்கிட்டு 3 இடங்களுக்கு போக திட்டமிட்டோம்.

இந்நாட்டில் 90% கிமர்(Khmer) எனும் இனத்தவர்கள்தான். மொழியும் கிமர் மொழி.2 வது மொழி பிரெஞ்ச். பணம் என்னவோ Riel ரியல். ஆனால் டொலர் கொடுத்துதான் பொருட்கள் வாங்குவது.முதலில் அரசமாளிகைக்கு போனோம். அங்கு போனால் எங்க Badluck அரசர் வருகையால் 9 மணிக்கு திறக்கப்படும் கதவு 2 மணிக்குதான் பார்வைக்கு திறப்போம் என காவலர் சொல்லிவிட்டார்.

                      இது வெளியில் இருந்து எடுத்தபடங்கள்......


                 

                          அரசர் மாளிகைக்கு போகிறார்...........
                       
எங்க நாட்டில் அரசரோ, பிரதமரோ, ஏன் மந்திரியோ வந்தால் TikTok பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? அந்நாட்டு பொலிஸ்காரர்கள்.


என்ன செய்வது என யோசித்து, அருகில்  கம்போடியாவின் பிரபலமான ஆறு Mekong ஓடிக்கொண்டிருக்கிறது.  அந்த சூழலே ஒரு பீச் மாதிரி இருந்தது. கொஞ்சநேரம் அதில் கழித்துவிட்டு அடுத்த ப்ளான் செய்த இடத்துக்கு போனோம். இந்த இடத்தில் சில படங்கள் பார்வைக்கு......நாங்க திரும்ப 2 மணியளவில் வந்து அரசமாளிகையை சுற்றிபார்த்தோம்.

இதுதான் மேகொங் (Mekong)ஆறு. இந்த ஆறினால் அங்கு தண்ணீர் கஷ்டம் இல்லை. கிராமபுறம் போனால் பார்க்க நன்றாக இருக்கிறது. எல்லா இடமும் வாய்க்கால், சின்னஓடைகள் ஊடாக இத்தண்ணீர் போகிறதாம். அங்குள்ளவர்கள் சொன்ன தகவல்கள். அதனால் அங்கு பசுமையாக இருக்கு.
இந்த இடத்தில் புறாக்களுக்கு அளவே இல்லை. எவ்வளவு புறாக்கள். எங்கிருந்துதான் வருகிறார்களோ தெரியாது. அங்கு ஹோட்டல் பக்கம் நான் ஒரு பறவையையும் காணவே இல்லை. ஆனா இங்கு ஒரே புறா மயம். ஆட்களுக்கு சரிசமமாக இருக்கிறார்கள். துளி பயமே இல்லை.காலை வந்து கொத்துவது , தலை சரித்து பார்ப்பது என உணவு கேட்கும் விதம் அலாதி.. பார்த்துக்கொண்டேயிருக்கலாம் சேட்டைகளை. கூடவே சிட்டுக்குருவிகளும். இவங்களை பார்க்க கோமதி அக்காதான் என் நினைவில் வந்தாங்க.______________________________________________________

      நான் எடுத்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் . நல்லாயிருக்கா
______________________________________________________

அரசமாளிகை உள்ளே.........

இந்த மாளிகைக்குள் அப்படி என்னதான் இருக்கோ..... பெரியஹால், புத்தர்சிலை. அவ்வளவுதான். ஆனா இதற்கு வாயில் காவலாளி பெரிய பில்டப் கொடுத்து கமரா, மொபைல் கொண்டு போககூடாது. படம் எடுக்ககூடாது என ஒரே சத்தம் போட்டார் அவர்கள் பாஷையில். ஆனால் அவர் கையில் வைத்துக்கொண்டு பேஸ்புக் பார்க்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்.... நான் விடுவேனோ, எப்படியோ அவர்களுக்கு தெரியாமல் எடுத்துவிட்டேன் படம். கீழே இருப்பதுதான்....


அரசர் வேறோர் இடத்தில் இருக்கிறார். இங்கு வந்து போவாராம். ஏன் ,எதற்கு வாறார் என்று கேட்டால் விபரம் இல்லை. ஒருவேளை சொல்லக்கூடாதோ என்னவோ. ஆனால் அழகாக கட்டியிருக்கிறாங்க. பெரிய மாளிகையா, கோவிலா என தெரியாத அளவு கட்டியிருக்காங்க. வளவுக்குள் புத்த கோவில்கள் இருக்கின்றன. அங்கே ஓதுதல்களும், பாட்டும், மணியோசையும் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்குமாம்.

                              இதுதான் அந்த மாளிகை.                               நல்ல அழகாக பராமரிக்கிறார்கள்.
இப்படி சின்ன சின்ன கோவில்கள் கட்டியிருக்கிறாங்க. என்ன அங்கு அடிக்கிற வெயிலுக்கு களைப்பு போக்க இருக்கலாம்.


படம் பார்த்து களைத்து போன உங்களுக்கு க்ரில் வாழைப்பழம் சாப்பிட்டுபோங்க. இது அங்கு அனேக இடங்களில் பார்க்கமுடியும். வாழைப்பழத்தை சுட்டுதருகிறாங்க. பிழைப்புக்காக என்னவோ புதுசுபுதுசா கண்டுபிடித்து விற்கிறாங்க. எனக்கு டேஸ்ட் பிடிக்கேல்லை.

இங்கு சிலவற்றை பார்க்கையில் பசும்பொன், அஞ்சு அடிக்கடி ஞாபகம் வந்தார்கள்.அதுவும் அஞ்சு சிலதை பார்த்தால் மயங்கியே விழுந்திடுவா. அப்படி இருக்கு .
ஹலோ....பசும்பொன் மெயின் பிக்சர் வர லேட்டாகும். பொயிங்ககூடாது. சரியா.

07/01/2020

கம்(பளி)பூச்சியா அனுபவங்கள்.

  வாழ்த்துகள் 2020
🙏பிறந்திருக்கும் புதிய 2020 ஆம் ஆண்டில் துன்பங்கள் நீங்கி ,இன்பங்கள் பு து பொலிவுடன் பெருகட்டும் 🙏 கடந்தவை கடந்ததாக இருக்கட்டும்🙏 புதிய புத்தாண்டு நம் எல்லோருக்கும் சாதனை தரும் ஆண்டாக🙏 மகிழ்ச்சி தரும் ஆண்டாக🙏 நல்லவைகளை அள்ளி தரும் ஆண்டாக 🙏 எண்ணிய செயல்கள் எல்லாம் இனிதே நிறைவேறும் ஆண்டாக🙏 இறை வழிப்பாட்டில் அதிக நம்பிக்கை தரும் ஆண்டாக அமைய 🙏ஆழ் மனதில் இருந்து இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்🙏 Wish a happy prosperous new year 2020 🙏 God bless u all 🙏வாழ்க வளமுடன் இறை ஆசியுடன்.


-----------------------------------------------------------------------------

இனி(ய) பயண அனுபவ அலப்பறைகள்........ தொடருகின்றது . 

கடந்த வருடம் வியட்நாம், மலேசியா, இலங்கை என பயணம் இருந்தது. இந்த திட்டத்தில் கம்போடியா போக இயவில்லை. இம்முறை இந்நாட்டுக்கும், சிங்கப்பூருமாக பயணம் அமைந்தது. ஊருக்கு போகமுடியல.கர்ர்ர்ர்..😟


நாங்க கம்போடியாவின் தலைநகரமான phnom  penh போய் இறங்கினோம். இது பெரிய நகரமும் கூட.

லப்பறைக்கு போக முன் இந்த நாடு பற்றி சின்ன வயது அனுபவம். எனக்கு சமூககல்வி பாடம் மிகவும் பிடிக்கும்.பொது அறிவு போட்டியில் பங்குபெறும்போது நாடுகள், நகரங்கள் எல்லாம் பாடமாக்கி வைத்திருப்பன். அதோடு சமூககல்வி மாஸ்டர் என்னைத்தான் வாசிக்க எழுப்புவார். அந்த பாடத்தில் எப்பவுமே  டி தான். அத்தோடு தமிழுக்கும் டி கிடைக்கும். (இங்கு பசும்பொன், பசுமைபுரட்சி என  பட்டங்கள் தொங்க விட்டவையின் கவனத்துக்கு)

அப்படி வாசிக்கும்போது இந்த நாட்டைப்பற்றி பாடம் வந்தது ஒருமுறை. நான் கம்போடியா என வாசிக்கவேண்டும்.  அப்ப  ஊரில கம்பளிபூச்சி (கம்பளிமசுகுட்டி) அதிகமா, அட்டகாசமா இருந்தது. எனக்கு  இந்த பூச்சி என்றா சரியான பயம். எல்லாருக்கும் ஒரு பயம் இருக்கு. ஆனா எனக்கு மரணபயம். ஏனென்றா அது என்னை அட்டாக் பண்ணாத நாளே இல்லை. எங்காவது இருந்து என் கையிலோ,கழுத்திலோ, சட்டையிலோ வந்துவிடும். தாங்கமுடியாத கடி, வீக்கம் என பாடாபடுத்தும். அப்படியான பூச்சி நான் புத்தகத்தில் பாடத்தை வாசிக்கும்போது  ஜன்னல் ஓரமா (வெளியில் செரி மரம் இருந்தது) இருந்தால் எப்படி இருக்கும். பிறகென்ன எனக்கு வாசிக்க வருமோ....ருமோ...மோ.. நான் பதட்டத்தோடு கம்போடியா என்பதற்கு பதில் கம்பிளிபூச்சியில் ...என சொல்ல எல்லாரும் விழுந்து விழுந்து சிரிக்க எனக்கு ஒரு மாதிரியாகிட்டுது.  மாஸ்டரும் "என்ன" என ஒரு மாதிரி பார்த்தார். பின் சுதாகரித்து கம்பூச்சியாவில் என வாசிக்க, திரும்பவும் ஒரு பார்வை சிரித்துவிட்டு யார் மாஸ்டர்தான், ... என்ன ஆச்சு என்றார். நான் உடனே சுவரை காட்டினேன். அதற்கு பிறதுதான் எல்லாருக்கும் விளங்கியது.  ஓ...கம்போடியா இப்படிதான் கம்பளிபூச்சி ஆனதோ என்று அவரும் விழுந்து விழுந்து சிரித்தார். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.  கம்போடியாதான் சொல்மொழி. ஆனா அவங்க உச்சரிப்பில் கம்பூச்சியா இதுவும் சரி வழக்கத்தில் உள்ளது என்றார். ஆனா நான் பயத்தில் சொன்னது., தெரிந்துசொல்லவில்லை.  Preăh Réachéanachâkr Kâmpŭchea. போனவருடமும் ஊரில் அட்டை மாதிரி இந்த பூச்சியும் அட்டகாசம். வளவுக்குள் போகும்போது மேலே பார்த்துதான் போவேன். எங்காவது தொங்கிகொண்டு இருக்கோ என பயத்தில..ஆனா எப்படிதான் கண்ணில மண்ணை தூவிட்டு வருதோ தெரியாது. கர்ர்ர்ர்ர்ர்....
   இது சும்மா தேட வந்தது கூகுள்ல. இப்படிதான் அந்த கம்பளிபூச்சி இருந்தது. ஸ்கூல் ஜன்னல் இப்படி இல்லை. 😀

அப்போ அந்நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற அங்கோர்வாட் கோவில் பற்றியும் அறிந்து வியந்து இதெல்லாம் எங்க நாங்க பார்க்கிறது, பாடபுத்தகத்தில படிக்கிறதோடு சரி என நினைத்து பேசிக்கொண்டோம்.. சத்தியமா நான் கனவு கூட காணேல்லை நான் அந்த கோவிலுக்கு போவேன் என்று. போய் வந்ததில் மனத்தில் பெரிய சந்தோஷம் உலகிலேயே பெரிய கோவில் என சொல்லப்படும் அக்கோவிலை பார்த்தது. அதுவும் தமிழ் மன்னன் கட்டிய கோவில் என்பதாக வரலாறு சொல்கிறது.

இது அதிகாலை சூரியோதயம் பார்த்த பொழுது. விடிகாலையில் இங்கு சூரியோதயம் மிகப்பிரபலம். நாங்க அதற்காகவே 4 மணிக்கு எழுந்து ஆட்டோ பிடித்து வந்தோம். இக்கோவில் பார்க்க ஒருநாள் முழுவதும் தேவை. இரவு 7 மணி ஆகிவிட்டது ஹோட்டலுக்கு போக.
 நான் நின்ற இடத்துக்கு பின்னாடி பனை மரமும் நிலாவும். அப்பொழுது சூரியன் வரவில்லை. ஆனால் வெளிச்சம் வந்துவிட்டது.
இந்த படங்கள் எல்லாம் நான் எடுத்தவை. விடிகாலையில் அங்கு போய்விட்டோம். இதனைபற்றி பின்னொரு பதிவில் எழுதுகிறேன். சுவாரஸ்யமான தகவல்கள் இருக்கின்றன. 

அங்கு எனக்கு ஏற்பட்ட அனுபவத்தினை, மனதில் பட்டதை, கேள்விபட்டதை, ஆதங்கங்களை, என் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்கிறேன். இந்நாடு இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறி வருகிறது. 
இதன் வரலாறு எல்லாம் எழுதி போரடிக்காமல்,  (இப்போ கூகுளாண்டவரை தட்டினால் எல்லாம் வருகிறது. அதனால் அதில் பார்த்துக்கொள்ளுங்கள். நான் ஏதும் பிழையா எழுதினால் வரலாறு மன்னிக்காது. ஹா..ஹா..ஹா.) என் அனுபவபகிர்வை மட்டும் பகிர்கிறேன்.

அன்று மாலை இவை நாம் தங்கியிருந்த ஹோட்டலிலிருந்து எடுத்த படங்கள். 

                                                   சூரியன் மறையும் காட்சி

எனக்கு இந்நாடு ரெம்ப பிடித்துபோய்விட்டது.எங்கட ஊர் மாதிரி இருக்கு. எங்கு பார்த்தாலும் மா,பலா,வாழை எனவும், பனைகளும் இருகின்றன. என்ன அதிக உஷ்ணம். வியர்க்கிறது குறைவு. நல்ல மனிதர்கள்.  ஒன்றுக்கும் கரைச்சல் படுத்தமாட்டார்கள். கடைக்கு போனால் அவர்கள் பாடு. ஏதாவது கேட்டால் மட்டுமே பதில். இது ஏன் என்பதை இன்னொரு பதிவில் சொல்கிறேன். அலப்பறைகள் தொடரும்...

பின்குறிப்பு:_  I need help.. நான் எழுதும் பதிவில் எழுத்தின் பின்னாடி(text backround) கலர் அடித்தமாதிரி வருகிறது.போஸ்ட் எழுதும் போது தெரியவில்லை. ப்ரீவியூ பார்க்க தெரிகிறது. எப்படி அதை நீக்குவது. உதவினால் அங்கோர்வாட் ல இருக்கும் அச்சுதன் அருள் புரிவார்.🙏

 
Copyright பிரியசகி