RSS

29/04/2020

Quarantine வும், அடுப்படி அலப்பறைகளும்....


இந்த கொரோனாவால் எல்லாரும் வீட்டில்தான். கணவருக்கு 4 கிழமைக்கு பின் இவ்வாரமே வேலைக்கு போகிறார்..ஆனால் இங்கு லொக்டவுன் என வீட்டிலே அடைந்து இருப்பது இல்லை. எங்கள் தேவைக்கு கடைக்கு போய்வருகிறோம். கடைகளில் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்கவேண்டும்.
இந்த வாரம் (27ந்திகதியிலிருந்து) முதல் இங்கு கட்டாயம் மாஸ்க் (Masks) போட்டுதான் கடைகளுக்கு செல்லமுடியும்.
இந்த லொக்டவுன் காலத்தில் நான் செய்த சில உணவுகள் இப்பதிவில். எனக்கு வீட்டில் இருவராலும் சாப்பாட்டு பிரச்சனையில்லை. எதையும் சமாளிப்பார்கள். நான்தான் எதையாவது முயற்சி செய்து , இருவரையும் பரிசோதனை எலிகளாக்கி விடுவேன். ஹா...ஹா..ஹா...
மாங்காய் கிடைத்து ஊறுகாய் போட்டேன். நெல்லிக்காயிலும் போட்டாச்சு.  பூரி மாதம் 2 தரம்தான் செய்வது. அது நல்லாவே வரும். கேக் புது முயற்சி. அதுவும் சொதப்பாமல் வந்தது.

அதைவிட எங்கள் அன்பு நண்பி,  தானைத்தலைவியின் செயலாளர்,  ஏஞ்சல்கிச்சன் ஓனர்  அஞ்சுவின் குணுக்கு செய்தேன். சூப்பரா, நல்ல டேஸ்டா இருந்தது. இப்பதிவு எழுதும்வரை 2 தரம் செய்தாச்சு. தாங்க்ஸ் அஞ்சு.

ஹலோ பிஞ்சு ஞானி இப்படி தேங்காயை குட்டியா துண்டாக வெட்டிப்போட்டால் கடிபடும்தானே. அதைதான் சொன்னேன். தேங்கா கடிபடும் போது நல்ல டேஸ்டா இருக்கும் என. அத்தோடு மிளகும் சேர அப்பப்பா சொல்லமுடியாது. செஞ்சுபாருங்கோ.

பனங்கிழங்கும் கிடைத்தது, அவித்து சாப்பிட்டாயிற்று. ஆனா கிழங்கு ஊரில் சாப்பிடுமாப்போல இல்லை. ஊரில் பனங்கிழங்கு அவித்து அதை அப்பா நாரெல்லாம் எடுத்து அழகா வட்ட வட்டமா வெட்டி வைப்பார். அதோடு உப்பு, மிளகு, உள்ளி, தேங்காய்துண்டு சேர்த்து சாப்பிட என்னா ருசி. இப்பவும் நினைத்தால் வாய் ஊறும். சிலவேளை இவை எல்லாம் சேர்த்து  உரலில் போட்டு துவைத்தும் சாப்பிடுவோம். மறக்கமுடியா நினைவுகள். 
எங்கள் வீட்டில் இரண்டு நெல்லிமரமும் இருக்கு. இந்த பெரிய நெல்லிக்காய் அளவிலும் பெரிது. மரத்தில் காகம் இருந்து ஒவ்வொன்றா கொத்தி போடும். இப்பவும் இருக்கு மரம். நிறைய காய்க்கும். இதையும் உப்புமிளகாய்தூள் கலந்து தொட்டு சாப்பிடுவோம். ஆனா என்ன கொஞ்ச நேரத்துக்கு வேறு ஒன்றும் சாப்பிட இயலாது. அதன் டேஸ்ட் தெரியாது. இதுதான் டொமினேட் செய்யும்.
இங்கு கிடைத்த இந்த நெல்லிக்காயை ஊறுகாய் போட்டுவிட்டேன்.

இது என்ன தெரியுமா? பப்பாக்காய். (பப்பாளிபழத்தின் காய்). ஊரிலிருந்த வரை உண்மையில் நான் இப்படி சாப்பிடவில்லை. ஆனா அக்கா சொன்னா அம்மா சமைக்கிறவா என. ஆனா எனக்கு ஞாபகமில்லை. இங்கு முதன்முதல் எனக்கு கணவர்தான் இதை சாலட் செய்யசொல்லி சொன்னார்.  பப்பாகாயை ஸ்க்ரப் செய்து சி.வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை கொத்தமல்லி, (இவைகளை பொடியாக வெட்டி )உப்பு, கொஞ்சம் லெமன் ஜுஸ் விட்டு  நான்  மரஉரலில் துவைத்து எடுத்தேன். சூப்பரா இருந்தது. கசக்கும் என யாராவது நினைக்கவேண்டாம். மிக அருமையான சாலட், துவையல் எப்படிவேணா வைச்சுகொள்ளுங்கோ பேரை...

இது பின்பு கிடைத்த பப்பாக்காயில் பொரியல் செய்தேன். இப்போ இதில் குழம்பு, கறி, பொரியல் என செய்வது வழக்கமாகிவிட்டது. 

இது மிளகுசாதம் செய்தேன்.  இது தெரிந்திருக்கும் எல்லாருக்கும். வழமையா வதக்கும் (வெங்காயம்,ப.மிளகாய், இஞ்சி,உள்ளி) பொருட்களுடன் (க.பருப்பு, உ.பருப்பு போடாமல்) கறுவா, ஏலம், கராம்பு போட்டு வதக்கி, பின்  கஜுவும்போட்டு வதக்கியபின் சாதத்தினை(இதற்கு சாதம் குழைய வேககூடாது.) போட்டு எல்லாவற்றுடன் நன்றாக கலந்து, கடைசியாக அரைத்த மிளகுதூள், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து, கொஞ்ச நெய் விட்டு கலந்தபின் இறக்கி சுடச்சுட சாப்பிட ஆஹா என்ன ருசி...... 

இதில் போண்டாபூரி, பன்(Bun),  அரிசி ஊறவைத்து அரைத்து குறுணல் எடுத்து கஞ்சி காய்ச்சி செய்த அப்பம், கேக், பரோட்டா இது செய்ய முன் சுற்றி வைத்த போதுதான் எடுத்தேன். வடை, 
இது இலங்கையில் பிரபல்யமான ரோஸ்ட் பாண்(Bread) & Sampol. இது மட்டும் என் கணவர் செய்தார். 
கணவர்  எங்கள் பிஞ்சு ஞானி மாதிரி.  என்ன கிடைக்குதோ போட்டு செய்து அதற்கு ஓர் பேரும் வைத்துவிடுவார். அளவு கேட்டால்.. ம்க்கும்  சொல்லீட்டாலும்.  எல்லாமே கண் பார்க்க கை செய்யோனும் என சொல்லும் ரகம். ஜேர்மன் உணவு வகைகள் பீஸா, பன், ரொட்டி,  நூடுல்ஸ் எல்லாம் செய்வார். டேஸ்ட் ஆக இருக்கும். ப்ளான் செய்து செய்வார். ஆனா அது அவரின் ஓன் ரெசிப்பியாகதான் இருக்கும். எதையும் பார்த்து செய்வதில்லை.. அப்படி பார்த்தாலும் அதை மாதிரி கடைசி வரை செய்யவே மாட்டார்.கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். நான் முதல் தரம் பார்த்து செய்து சரிவந்தால், அடுத்த முறை கொஞ்சம் மாத்தி விடுவேன். வேற ஐடியா கிடைத்துவிடும்.
வழமையாக இந்த பன் அவர்தான் செய்வார். அளவு  என்ன என கேட்க சொல்லத்தெரியலை என்றார். பின் இது youtube பார்த்து செய்தேன்.  நல்லாயிருக்கு என இருவருமே சொன்னார்கள். 



இங்கு மாங்காய் கிடைக்கும். அடிக்கடி வாங்கி ஊறுகாய் போடுவேன். ஆனா எனக்கு சும்மா உப்புமிளகாய்தூளோடு தொட்டு சாப்பிடுவதே மிகவும் விருப்பம். பள்ளிகூடம் போகும் நாட்களில் அங்கு உப்புமிளகாய்தூள் கொண்டுபோய் intervel time ல நண்பிகளோடு பக்கத்து வீட்டுக்கு தண்ணீர் குடிக்கவென போய் (அதுவும் பாடசாலைவேலிக்குள்ளார புகுந்து போவது. முன்வாசலால் போகமுடியாது) மாங்காய் பறித்து இதில் தொட்டு சாப்பிட என்னா ருசி.  மறக்கமுடியாது அந்நாட்களை.




என் வீட்டுத்தோட்டத்தில்.......
இம்மாதம் 6ந்திகதியில் இப்படி இருந்தன ரோஜா செடிகள். அப்போதான் துளிர் எல்லாம் வரத்தொடங்கியிருந்த வேளை......


இன்று இப்படி. இப்போ இங்கு மழையும், குளிருமாக இருக்கின்றது.


                                        அப்பிள் எப்படி பூத்திருக்கு 



வீடியோ கண்டிப்பாக பாருங்கோ.  சிறுமுயற்சி.
             

இதுதான் எங்கள் வீட்டின் Pear பூக்கள். ( பாருங்கோ பிஞ்சு ஞானி ) இம்முறையும் மரங்கொள்ளா அளவுக்கு பூத்திருக்கினம். அவசர அவசரமா பூப்பது இவாதான். எத்தனை காய்கள் தருகினமோ தெரியாது. இப்படித்தான் நிறைய்ய பூக்கள் பூப்பது. பின் 1 அல்லது 2,3 காய்களோடு நிறுத்திவிடுவினம். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்  இம்முறை எப்படியிருக்குமோ தெரியாது. 

எல்லோரும் பத்திரமா, பாதுகாப்பா இருங்கோ.🙏

01/04/2020

புத்தரும், Marlboro சிகரெட்டும்...

இது கம்போடியாவின் தலைநகரத்தில் இருக்கும் ஒரு புத்தகோவில். 1327 ல் கட்டப்படது. 88.5 அடி உயரமான கோவில். அந்த நகரத்திலிருக்கும் மிக உயரமான கோவில். 

                            Board ல் எழுதியிருந்தது.

                        வாயில் முகப்பு.உயரமாக ஏறி போகனும்.

                           மேலிருந்து பார்த்தால் இப்படி இருக்கும்.


 உள்ளே புத்தர்சுவாமிகள் பல பரிவாரங்களுடன் புடை சூழ இருந்தார்.







இவருக்கும், பரிவாரங்களுக்கும் படைக்கப்பட்டிருக்கும் பொருட்கள்....பாருங்கள்.

                                            பீடா, சிகரெட்

                                 காசு,பணம், துட்டு, மணி, மணி

                    இவரை சுற்றி வெளியிலும் இதே மாதிரி இருக்கிறார்கள்...




                           சொக்லேட், காசு, தண்ணீர் போத்தல்



                             ஆனா இவைகளும் வைக்கப்பட்டிருந்தது..


                                இவர்களும் வணங்குகிறார்கள்..


                               நாளை எனும் கவலையில்லாமல்...
+++++++++++++++++++++++++++++++++++++
சின்ன செய்தி>>
சும்மாவே நான் கை அடிக்கடி கழுவும் பேர்வழி. மகனையும், கணவரையும் வெளியில் போய் வந்தவுடன் (மகன் மறந்திடுவார்)கழுவச்சொல்வேன். இப்ப இந்த கொரோனா வந்து என் வேலையை மிச்சப்படுத்திவிட்டது. என்னை ஏசுவார்கள் எப்ப பார்த்தாலும் கையை 1008 தரம் கழுவிக்கொண்டு இருக்கிறாய் என.  ஆனா யோசிச்சு பாருங்கோ வீட்டுவேலை செய்வது நான். அதுவும் க்ளீனிங் என்றா கட்டாயம் கழுவ வேண்டும்தானே. கிச்சனில் கழுவ வேண்டுமெல்லோ. எப்படி பார்த்தாலும் நிறைய தரம் கழுவவேண்டும்.   இப்ப எல்லாரும் வீட்டில் அடிக்கடி கை கழுவிக்கொள்ளுகிறார்கள்.

*******************************************************
அதிரா வீட்டு பொருட்கள் என்னிடமும்.......
என்னிடம் இருப்பது, மாமா அனுப்பினார்,  அம்மா, அண்ணா அனுப்பினவை  என  அதிரா அவாவின் ப்ளாக் ல் படம் போடுவா.  அதை பார்த்து இது என்னிடமும் இருக்கு என நான் எழுத, அதிரா என்னைபற்றி என்ன நினைப்பா சொல்லுங்கோ. ஆனா நான் என்ன செய்வதாம். அது என்கிட்டேயும் எல்லோ இருக்கு..... அதான் படம் போட்டிருக்கேன் நானும்.  படங்களை உடன் எடுத்து சேர்த்தேன்.. அதுதான் பதிவு நீளமாகிவிட்டது.

                                 புட்டு பானை, இரும்புச்சட்டி
                                         
                             மூங்கில் குழல். புட்டு அவிப்பது


இது என் அம்மா பாவித்தது. குழம்பு,சொதி, பொரியல் என இதில் செய்வார். இப்போ இது என்னிடம். கடந்த வருடம் போனபோது இரும்புசட்டி தேடியலைந்து களைத்து போனபோது அக்கா எனக்கு இதை தந்தார். அம்மாவே என்னோடு இருப்பது போன்ற உணர்வு. கைபிடி கம்பி மிஸ்ஸிங். போடனும்.
                           
                                   அரிக்கன்சட்டி, அகப்பை
   
                                        கொய்யாகாய்
                            கொய்யா,  நெல்லிக்காய், அம்பிறலங்காய்
சுளகு. இதை பாவிக்கிறனோ இல்லையோ  வாங்கி வந்தேன். ஆனாலும் மா அவித்து ஆறவிடுவேன். புட்டு குத்துவது இதில்தான். எனக்கு இது சரியான விருப்பம்.  அம்மி ஒன்றுதான் இல்லை.அதுவும் அடுத்தமுறை வந்துவிடும் என என் கணவர் சொல்கிறார். கர்ர்ர்ர்ர்ர்ர்ர்
                          இடியப்ப உரல்,  முறுக்கு உரல், அச்சு உரல்
                                      கித்துள்

இது ஆனைக்கோட்டை நல்லெண்ணைய். ஆனைக்கோட்டை என்பது ஒரு ஊர். இங்குதான் நல்லெண்ணைய் பிரபலம். அங்கு இன்னும் பரம்பரையா செக் கில் ஆட்டி எடுத்து எண்ணெய் விற்கிறார்கள். அவங்க கடையில் வாங்கி வந்தது. அக்கடையில் இருக்கும் ஐயா சொன்ன டிப்ஸ் நல்லெண்ணைய் கறுப்பு போத்தலில் வைத்து இருட்டில் வைக்கவேண்டுமாம். அத்துடன் ஈரம் படாமலிருந்தால் கெட்டுபோகாது, நீண்டநாள் இருக்கும் என்றார். இடது போத்தல் நான் போனபோது கொண்டு வந்தது. வலது பக்கம் இருப்பது இவ்வருடம் தை பொங்கல் அன்று வந்தது. 
   
                               இடியப்பதட்டு.




எல்லோரும் பாதுகாப்பாக, பத்திரமாக இருக்கவும்.🙏
 
Copyright பிரியசகி