RSS

25/11/2019

நீங்களும் ஆகலாம் கோடீஸ்வரர்!!

இந்த பதிவை வாசிக்க முன் கண்டிப்பா இந்த videoவை பார்த்தபின் தான் வாசிக்க செல்லவேண்டும்.ஊரில வீட்டு வளவுக்குள் 2,3 மரம் வைச்சிருக்கிற நிலையில...........
இங்கு கறிவேப்பிலை காண கண்கோடி வேண்டும். அரிதான ஒன்றாகிவிட்டது. இடைக்கிடை கிடைக்கும். ஆனா முடிந்துவிடும்.  நாங்க ஏசியன் கடைக்கு போகவே 1 மணித்தியாலம் வேணும். அதைவிட அதன் விலைக்கு 3 பால் பாக்கெட், 2 மா பாக்கெட் வாங்கிடலாம். அப்படியான ஒன்றாகிவிட்டது.  இங்கு இறக்குமதி செய்தவர்கள்தான். ஆனால் அதில் பூச்சிகள் இருந்ததை பார்த்து அதை தடை செய்துவிட்டார்கள்.  திருட்டுதனமா தரைவழிபாதையாக வருகிறது என்கிறார்கள்.  இருக்கிறது, ஆனா விலை.  நாங்கதான் ஒன்றுக்கு அடிமையானால் விடமாட்டோமே.. அப்படியானதுதான் இந்த கறிவேப்பிலை விடயம்.  அதை குழம்பில் காணவில்லை எனில் (அதை சாப்பிடுகிறோமோ, இல்லையோ அது வேறு விடயம்) கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாது. இங்கு 15கி  1 யூரோ 85 சென்ட்.  

இப்படி நிலமை இருக்க ஆபத்பாந்தவனாக எங்களுக்கு தெரிந்த அக்கா ஒருவர் சின்னதா கறிவேப்பிலை செடி தந்தா. ஆ....சந்தோஷமோ சொல்லமுடியாது வார்த்தைகளால்.  அதன் பின்புதான் எனக்கு செடி பராமரிப்பு தேடல் ஆரம்பம் ஆனது.
அதற்கிடையில் ஊருக்கும் போகவேண்டி வந்தது. அப்போ இந்தமாதிரி ஒரு முன்னேற்பாடு செய்துவிட்டு  சென்றேன். (எனது நண்பி வந்து தண்ணீர் ஊற்றுவதாக சொன்னா. அவாவிடம் தண்ணீர் பார்த்து விடச்சொன்னேன்.)  அப்போ இவா வீட்டிற்கு வந்த புதிதில்.. (ஹா..ஹா.. செடியை மரியாதையாக சொல்வதுதான் என் வழமை. அப்படியே வீட்டினருக்கும் பழக்கிவிட்டேன். )


இதுதான் அந்த கறிவேப்பிலை செடி. இது  கொஞ்சம் வளர்ந்தபின் எடுத்தது.

வீட்டில 3K நிற்கிறார்கள். (கற்பூரவள்ளி,கற்றாழை,கறிவேப்பிலை. பிறகு பிறை வந்து கேள்வி கேட்பா. முன் எச்சரிக்கையா எழுதியாச்சு)


ஊருக்கு போயிட்டு வந்தபின் ஒரு 4,5 மாதத்தின் பின்  என் கறிவேப்பிலை செடி நோய்வாய்ப்பட்டு இந்த நிலமைக்கு வந்துவிட்டது. உண்மையில் எனக்கு சரியான கவலை. என்னவெல்லாமோ செய்து, யாரையோ கேட்டு, வீடியோ பார்த்து செய்தால் அவா பட்டுபோய்விட்டா. ஏன் எனத்தெரியவில்லை. சொல்லமுடியாகவலையெனக்கு.😢😢😢


ஊருக்கு போயிட்டு வரும்போது சில செடிகள், விதைகள் கொண்டு வந்தேன். அதில் நான் சின்னபிழை விட்டுவிட்டேன். என்ன விதை என எழுதாமல் விட்டது. சரி போட்டுபார்ப்போம், வந்தபின் தெரியும்தானே என விட்டுவிட்டேன்.
அதில் எங்க வீட்டு கறிவேப்பிலை மரத்திலிருந்து ( பெரியமரமா நிற்கிறா. இம்மரம் நான் சின்னபிள்ளையாக இருந்தபோது இருந்த மரத்தின் மகள்மரம்.) சில விதைகளை எடுத்துக்கொண்டு வந்தேன். இங்கு சிறு தொட்டியில்  சிலதை போட்டு வைத்தேன். என்ன விதை எனத்தெரியாமலே கறிவேப்பிலை விதையை  கனகாம்பர செடியின் தொட்டியில் விதைத்தேன்.  பின் மறந்தும் போனேன். கனகாம்பரம் சிலநாளில் பட்டுவிட்டது. பின் தொட்டியை எடுக்கச்சொல்லி கணவர் சொல்ல, நான் பார்த்தபோது  ஏதோ சின்னதா துளிர் இருக்க,  அதுவே என் மனதிலும்... மனம் படபடத்தது. என்னவா இருக்கும் என ஆர்வத்தோடு சில நாட்கள் பொறுமையை கடைபிடித்தேன்.  கொஞ்சம் வளர்ந்திருந்து 2 இலைகள் வர ஆர்வக்கோளாறால் தொட்டு பார்க்க. நல்ல வாசம்.  ஆவ்..... ..கறிவேப்பிலை.
வா..வ் எனக்கு பயங்கர சந்தோஷம். எங்க வீட்டுச்செடி இப்போ இங்கு என் வீட்டில்..

இது கடந்த வருடம் ஊருக்குபோனபோது (முதல் செய்தமாதிரி) பிளாஸ்டிக் கானில் (Plastic can) தண்ணீர் விட்டு அதற்குள் கயிறு (நான் நூல் கயிறு அதாவது ஸ்கிப்பிங் skipping rope பயன்படும் கயிறு) விட்டு, மற்றைய நுனியை செடியினுள் வைத்தால் தண்ணீர் அளவாக சொட்டும். கானில் தண்ணீர் மட்டும் பார்த்து நிரப்பினால் போதும்.  இந்த ஏற்பாட்டை செய்தேன். பின் மகனார் பார்த்து தண்ணீர் விட்டு விட்டார்.  வீட்டினுள் இருந்த எல்லா செடிகளுக்கும் இந்த முறையை பாவித்தேன்.

இந்த  வருடம் இன்னும் சில விடயங்களை செய்து, இப்போ நன்றாக வளர்ந்து அவாவும் 2 குட்டிசெடிகளை  தந்துவிட்டா. இப்போ வீட்டில் கணவர் பிடுங்க விடுவதேயில்லை.  அது இன்னும் கொஞ்சம் வளரட்டும் என்பதால்.. .அதை சும்மா தொட்டாலே நல்ல வாசம். அதைவிட எங்க வீட்டு செடி என்ற செண்டிமெண்ட் வேறு. ஆனா நான் பச்சடி, சாலட் க்கு போட அதில் ஆய்ந்து போடுவேன். நன்றாக இருக்கும். கறிவேப்பிலை வளர நீண்டநாட்கள் எடுக்கும். ஊரில் மரத்தின் கீழ் நிறைய செடிகள் இருக்கு. காகம் அதன் பழங்களை கொத்தி கீழே போட அவை வளருகிறது.
 
                      
                 இப்ப உடனே எடுத்த போட்டோ. வெயில் இல்லாததால் இப்படி.3 கிளைகளுடன்..

நல்ல பராமரிப்பு இருந்தால் இந்நாட்டிலும் வளர்க்கலாம். இங்கு எங்க நாட்டு செடிகள் வளர்ப்பதென்பது சவாலான விடயம். எங்க ஊர் வெப்பநிலை இங்கில்லை. அதை விட 5, 6 மணித்தியாலங்கள் வெயில் கண்டிப்பா தேவை. இப்ப பாருங்கோ இங்கு 4 மணி எனில் இருள் சூழ ஆரம்பித்துவிடும். 4 மாதம் கொஞ்சம் சிரமம். முயர்சி செய்து வளர்த்து வருகிறேன். மேலும் சில செடிகள் இருக்கு.அவை பின்னர் வரும். பிறகு கார்த்திகைபிறை பொயின்ட் ஆயிடுவா.
அதற்காக நீங்க கோடீஸ்வரியோ? எனக்கேட்ககூடாது. இங்கு இவா வீட்டில் நின்றாலே இப்போதைக்கு கோடீஸ்வரிதான்.
*******************************************************

 
Copyright பிரியசகி