RSS

02/10/2015

பசுமை நினைவுகள்....

நான்  பல தடவை ஊருக்கும், சில நாடுகளுக்கும் பயணப்பட்டிருக்கேன். ஆனா இம்முறை ஊர்பயணம் (srilanka) மறக்கமுடியாததொன்றாகிவிட்டது. என்ன தான் Airbus A380 செல்ல ஆசைப்பட்டு, அதில் சென்று வந்தாலும், புகையிரதத்தில் செல்லுமாப்போல வராது. அதில் வரும் சந்தோஷம், மகிழ்ச்சிக்கு ஈடேது.
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு நான் சென்ற புகைவண்டி பிரயாணம் மறக்கமுடியாது. பல நினைவுகள் இந்த இரயில் பயணத்தின்போது ஞாபகத்துக்கு வரத்தொடங்கின.  யாழ்ப்பாணத்துக்கு நீண்ட காலமாக புகையிரதம் ஓடவில்லை. பிரச்சனை,சண்டை காரணமா நடைபெற்றுக் கொண்டிருந்த சேவையை 1990 ம் ஆண்டு நிறுத்திவிட்டது.
தற்போதுதான் மீண்டும் சேவைகள் நடைபெறுது. எனது சின்ன வயது காலத்தில் "யாழ்தேவி" என்ற பெயரில் புகையிரதம் ஒன்று யாழ்-கொழும்புக்கிடையில் ஓடியது.  மிகவும் பிரபல்யமானது. சிறுவயதில் ஆசையுடன் கொழும்புக்கு சென்று வந்த புகையிரதம்.
இப்புகையிரதம் (யாழ்தேவி) பல இன்பதுன்ப நிகழ்வுகளோடு யாழ்ப்பாண மக்கள் வாழ்க்கையில் ஒரு அங்கமாகவே இருந்து வந்தது. யாழ்ப்பாணத்துக்கும்-கொழும்புக்கும் இடையே சென்று வந்த இப்புகைவண்டி ஒரு உறவாகிவிட்டிருந்தது. யாழிலிருந்து கொழும்பு சென்று வேலைப்பார்ப்பவர்கள், இதில் வெள்ளிக்கிழமை வீடு திரும்பி, பின் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு செல்வார்கள். அத்தனை தூரம் பயணப்பட வசதியாக இவ்வண்டி இருந்தது. நிறைய அண்ணா,அக்காமாரின் இதயத்தை இடம் மாற்றி, இன்ப நிகழ்வுகளுக்கு வழிவகுத்தது இவ்யாழ்தேவி.
என்னதான் இச்சேவை நடைபெற்றாலும் அக்காலம்போல வரவே வராது. அந்நினைவை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனா திரும்ப வராதே...ம்.ம்ம்
ஆனால் எனக்கு யாழ்தேவியில் செல்லக் கொடுத்து வைக்கவில்லை. நான் intercity எக்ஸ்பிரஸ் ல்தான் ஊருக்குச்சென்றேன். ப்ளைட் ல் என்னதான் வசதிகள் இருந்தாலும், அதில் ஒன்று தூக்கம், அல்லது அதில் இருக்கும் கேம்ஸ், அல்லது படங்கள் பார்க்க‌, பாட்டுக்கள் கேட்கவே முடியும். வெளியில் பார்த்து ரசிக்க வெண்மேகங்கள்தான். அதையும் எவ்வளவுதான் ரசிக்கமுடியும்.

                   நான் சென்ற அதிவிரைவுவேக புகைவண்டி.
ஆனால் புகைவண்டியில் அப்படியில்லை. அதுவும் ஜன்னலோர இருக்கை கிடைத்துவிட்டால் சொல்லவே தேவையில்லை. பகல் நேர பயணமானால் ஜன்னல் பக்கம் இருந்து பார்க்கும்போது எங்களை கடந்து செல்லும் இயற்கையழகு, மனிதர்கள், மிருகங்கள், வீதிகள், வாகனங்கள் இப்படி ரசிக்க நிறைய்ய்ய்ய இருக்கும். நேரம் செல்வதே தெரியாது. அப்படிப்பட்ட பயணமாக   நீண்ண்ண்டகாலத்துக்கு பின் கிடைத்தது. மிகவும் சந்தோஷமாக இருந்தது அப்பயணம்.








                       கிளிநொச்சி(மாவட்டம்) எனும் ஊர்.

                                  ஆனையிறவு உப்பளம்



 சாவகச்சேரி எனும் ஊரில் இருக்கும் வைத்தியசாலை

முதன் முதல் யாழ்தேவி புகைவண்டி பயணத்தின் போது என் தம்பியுடன் ஜன்னலோர இருக்கைக்கு சண்டை பிடித்ததும், எங்கள் சண்டையை பயன்படுத்தி மாமா மகன் அவ் இருக்கையில் ஓடிபோய் இருந்து கொண்டதும், பின்னர் நானும் தம்பியும் சண்டையை மறந்து அவனை அதிலிருந்து ஒற்றுமையா அப்புறப்படுத்தி, "நீ இரு, இல்லையில்லை நீ இரு" என்று விட்டுக்கொடுத்து, பின்னர் இருவரும் மாறிமாறி இருந்து போனதும் ஞாபகத்தில் வந்து மனதை நெகிழச்செய்தது. இப்படி என் பயணம் நீண்ட காலத்தின் பின், யாழ்தேவியில் செல்லாவிட்டாலும், பல பழைய நினைவுகளை ஏற்படுத்திய ரயில் பயணமாக, மறக்கமுடியாமலும் அமைந்துவிட்டது...!!!!
இதுதான் எங்க ஊர் யாழ்ப்பாணம் புகையிரத நிலையம்.




பின்குறிப்பு.>ஆனாலும் இடையில் ஒருநாள் சுன்னாகம் எனும் ஊரிலிருந்து  யாழ்தேவியில் ஏறி(டிக்கெட் எடுத்துதான்) யாழ்ப்பாணத்துக்கு சென்று வந்தேன். விருப்பத்தை கொஞ்ச தூரமெனினும் யாழ்தேவியில் பயணம் செய்து நிறைவேத்தியாச்சு...!!
 
Copyright பிரியசகி